செய்திகள்
கங்கனா ரணாவத், உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்

Published On 2020-09-11 02:50 GMT   |   Update On 2020-09-11 02:50 GMT
உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை :

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிவசேனாவுக்கும், நடிகைக்கும் மோதல் உண்டானது.

மேலும் பலத்த எதிர்ப்பை மீறி அவர் நேற்று முன்தினம் மும்பை வந்தார். இதற்கிடையே பாந்திரா பாலிஹில்லில் உள்ள கங்கனா ரணாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி மாநகராட்சியினர் அவற்றை இடித்து தள்ளினர்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகை கங்கனா ரணாவத், “உத்தவ் தாக்கரே என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்? திரைப்பட மாபியா கும்பலுடன் இணைந்து எனது வீட்டை இடித்ததன் மூலம், என்னை பழிவாங்கி விட்டதாக நினைக்கிறீர்கள். இன்று எனது வீடு இடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும்” என ஆவேசமாக கூறியிருந்தார்.

இந்தநிலையில் முதல்-மந்திரியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பையை சேர்ந்த வக்கீல் நித்தின் மானே, விக்ரோலி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரை என்.சி. வழக்காக போலீசார் பதிவு செய்து கொண்டனர். ஆனால் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடிகை முதல்-மந்திரியை பற்றி தரக்குறைவாக பேசி அந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றி உள்ளதாக வக்கீல் புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக கோர்ட்டை அணுகுமாறு கூறியுள்ளோம்” என்றார்.

இந்தநிலையில் மும்பை கார் பகுதியில் உள்ள கங்கனாவின் வீடு மற்றும் பாந்திராவில் உள்ள அவரது பங்களா, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க நடிகை வீட்டின் முன் வேனில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஏற்கனவே அவருக்கு மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் முதன்மை ஆலோசகரை நேரில் அழைத்த கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, நடிகை கங்கனாவின் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதத்துக்கு தனது அதிருப்தியை அவரிடம் பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பானர் சஞ்சய் ராவத் நேற்று கூறுகையில், ’கங்கனா பிரச்சினை முடிந்து போன அத்தியாயம். நாங்கள் அதை மறந்து விட்டோம்‘ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News