செய்திகள்
நடிகை கங்கனா ரணாவத், வீடு இடிப்பு

நடிகை கங்கனா ரணாவத் வீடு இடிப்புக்கு பழிவாங்கும் செயல் என பாஜக குற்றச்சாட்டு

Published On 2020-09-10 04:07 GMT   |   Update On 2020-09-10 04:07 GMT
நடிகை கங்கனா ரணாவத் வீடு இடிக்கப்பட்டது அரசியல் பழிவாங்கும் செயல் என பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை :

மும்பை பாந்திரா பாலிஹில் பகுதியில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்துக்கு சொந்தமான பங்களாவுக்கு நேற்று சென்ற மும்பை மாநகராட்சியினர், அங்கு விதிமுறை மீறி கட்டப்பட்ட பங்களாவின் ஒரு பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

சிவசேனா வசம் உள்ள மும்பை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான ஆசிஷ் செலார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பழிவாங்கும் நடவடிக்கையாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றால், கடந்த ஆண்டு கட்டுமானத்தின்போது மாநகராட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீங்கள் ஆளும் கட்சியுடன் நின்றால் காப்பாற்றப்படுவீர்கள். அப்படி இல்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் அவர்களின் அணுகுமுறை. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பழிவாக்கும் அரசியலை விளையாடுகிறது.

பாந்திராவில் உள்ள முதல்-மந்திரியின் வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவிலேயே சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை பார்க்க முடியவில்லை. துரதிருஷ்டவசமாக குறிப்பிட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது ஒரு ஆணவமிக்க அரசு.

கங்கனா ரணாவத்தின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால், மும்பைக்கு வரும் நபரின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களை பாதுகாப்பது அரசின் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News