செய்திகள்
டாக்டர் ரவீந்திரநாத்

அதிகாரிகள் தொல்லையால் வேலைக்கு செல்லாமல் ஆட்டோ ஓட்டி வந்த அரசு டாக்டருக்கு பணி இடமாற்றம்

Published On 2020-09-10 03:24 GMT   |   Update On 2020-09-10 03:24 GMT
அதிகாரிகள் தொல்லையால் வேலைக்கு செல்லாமல் ஆட்டோ ஓட்டி வந்த அரசு டாக்டர் ரவீந்திரநாத்தை, கொப்பல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் பாட கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவர் பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.

இவர் சரிவர பணியாற்றுவதில்லை என்றும், கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்ததாகவும் கூறி பிம்ஸ் அரசு ஆஸ்பத்திரி டீன் கட்டாய விடுமுறையில் அனுப்பினார். 2-வது தடவையும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த ரவீந்திரநாத், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

பின்னர் அவர் சொந்த ஊரான பாட கிராமத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். மேலும் தனக்கு 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் என்னால் சுயமாக வேலை செய்ய முடியவில்லை என்றும் குற்றம்சாட்டி வந்தார்.

இதுபற்றி அறிந்த சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமுலு பணிக்கு திரும்பும்படியும், புகார் குறித்து விசாரிப்பதாகவும் டாக்டர் ரவீந்திரநாத்திடம் கூறினார். இந்த விவகாரம் குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டாக்டர் ரவீந்திரநாத்தை, கொப்பல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது கொப்பல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் குடும்பநல சிகிச்சை பிரிவுக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரவீந்திரநாத், தான் ஓட்டி வந்த ஆட்டோவை ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கியுள்ளேன். நான் கடன் வாங்கி தான் இந்த ஆட்டோவை வாங்கினேன். இதுவரை ரூ.40 ஆயிரம் கட்டியுள்ளேன். மீதி கடன் தவணையை செலுத்தும்படி அந்த நபரிடம் கூறியிருப்பதாக ரவீந்திரநாத் தெரிவித்தார்.
Tags:    

Similar News