செய்திகள்
நரேந்திர மோடி

சாலையோர உணவு வியாபாரிகளுக்கும் ஆன்லைன் உணவு வினியோக தளம் - பிரதமர் மோடி அறிவிப்பு

Published On 2020-09-09 22:03 GMT   |   Update On 2020-09-09 22:03 GMT
சாலையோர உணவு வியாபாரிகளுக்கும், ஆன்லைன் உணவு வினியோக தளத்தை ஏற்படுத்த ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
போபால்:

பெரிய ஓட்டல்களை போன்று சாலையோர உணவு வியாபாரிகளுக்கும், ஆன்லைன் உணவு வினியோக தளத்தை ஏற்படுத்த ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வியாபாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அறிவித்தார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால், வியாபாரம் பாதிப்பு அடைந்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கும், தெரு வியாபாரிகளுக்கும் மத்திய அரசு பி.எம்.ஸ்வாநிதி (சாலையோர வியாபாரிகள் சுய சார்பு நிதி திட்டம்) என்ற பெயரில் கடன்கள் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கியது.

உத்தரவாதம் இன்றி குறைந்த வட்டிக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்ற மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தெரு வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறு நேற்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.

இந்தூர் மாவட்டம், சன்வர் நகரை சேர்ந்த தெரு வியாபாரி சாகன் லாலுடன் பேசும்போது, துடைப்பம் தயாரிப்பதற்கான செலவை குறைப்பதற்கு விளக்குமாறு தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் குழாயை (கைப்பிடி) திருப்பித்தருமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்கலாம். இதன்மூலம் வியாபாரத்தை மேம்படுத்த முடியும் என யோசனை கூறினார். சாகன்லால், தனது வியாபாரத்தை மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு, குடிநீருக்காக ஒரு நேரம் பயன்படுத்தி விட்டு விட்டெறிந்து விடுகிற பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மண்பானையை உபயோகிக்குமாறு மோடி, அவருக்கு ஆலோசனை வழங்கினார்.

பிரதமர் மோடி, உஜ்வாலா யோஜனா என்கிற இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம், அவர்களது குடும்பத்துக்கு எவ்வாறு பயன் அளிக்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

குவாலியரில் தெருவில் உணவு வியாபாரம் செய்கிற அர்ச்சனா சர்மாவுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அந்த பெண் விற்பனை செய்யும் ‘டிக்கி’யை (தின்பண்டம்) தனக்கும் வழங்குவாரா என கேட்டார்.

சாலையோர வியாபாரிகள் சுய சார்பு நிதி திட்டம் பற்றியும், அந்த திட்டம் எப்படி அவர்களுக்கு பயன் அளித்தது என்பது குறித்தும் விசாரித்தார். ஆயு‌‌ஷ்மான் திட்டம் (சுகாதார காப்பீட்டு திட்டம்) பற்றி தெரியுமா என கேட்டார். அதற்கு அவர், இந்த திட்டத்தின்கீழ்தான் தனது கணவர் சிகிச்சை பெறுவதாக குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் ராஜேந்திர சர்மாவுடனும் மோடி சில வார்த்தைகள் பேசினார்.

ரைசன் மாவட்டம், சாஞ்சியை சேர்ந்த காய்கறி வியாபாரி தல்சந்த் என்பவருடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் காய்கறிகளுக்கு விலையாக பணத்தை ரொக்கமாக பெறுவதற்கு பதிலாக ‘கியுஆர் கோட்’ டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவதை அறிந்து பாராட்டு தெரிவித்தார். காய்கறி வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான சில வழிமுறைகளையும் பிரதமர் மோடி அவருக்கு எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பி.எம்.ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் கடன்பெற்று முன்னேறி வருபவர்களை நான் வாழ்த்துகிறேன். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு வியாபாரிகளுக்கு இந்த திட்டத்தின் பலன்களை வழங்குவதும், அத்தகைய 4½ லட்சம் பேருக்கு அடையாள அட்டைகளை வழங்குவதும் ஒரு பெரிய வி‌‌ஷயம். இரண்டே மாதங்களில் மத்திய பிரதேச மாநில அரசு இதை சாதித்து இருப்பது பாராட்டுக்குரியது. மற்ற மாநிலங்கள், மத்திய பிரதேச மாநிலம் மூலம் உத்வேகம் பெற வேண்டும்.

தெருக்களில் உணவுகளை விற்பனை செய்கிறவர்களுக்கும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விற்பனை தளத்தை வழங்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிய ஓட்டல்கள் போல, தெரு உணவு வியாபாரிகளும் ஆன்லைன் வழியாக உணவுகளை வினியோகம் செய்ய முடியும். இந்த வசதியை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் தெரு வியாபாரிகள் முன்வந்தால், அரசு இந்த முயற்சியை மேலும் தீவிரமாக்கும். பெரிய அளவில் தெரு வியாபாரிகள், ஆன்லைன் கட்டண முறையை பின்பற்ற வேண்டும்.

ஆன்லைன் பண பரிமாற்ற முறை கடந்த 3, 4 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் இதன் பயன்பாடு உணரப்பட்டுள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் ரொக்க பண பரிமாற்றத்தை தவிர்த்து விட்டு, மொபைல் போன் வழியாக பணத்தை செலுத்துகிறார்கள். தெரு வியாபாரிகள் அனைவரும் இந்த டிஜிட்டல் முறையை பின்பற்ற முன் வரவேண்டும். ஒரு புதிய தொடக்கத்தை வங்கிகளும், டிஜிட்டல் கட்டண முறை வழங்குனர்களும் தொடங்கி உள்ளனர். வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண முறை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தெரு வியாபாரிகளிடம் வந்து, ‘கியுஆர் கோட்’ வழங்கி, அதை பயன்படுத்தும் விதத்தை சொல்லித்தருவார்கள். எனவே தெரு வியாபாரிகள், டிஜிட்டல் பண தளத்தை அதிகளவில் பயன்படுத்தி, உலகிற்கு ஒரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பி.எம்.ஸ்வா நிதி திட்டத்தின் கீழ், வியாபாரிகள் பெறுகிற கடன்களுக்கு 7 சதவீத வட்டி தள்ளுபடி வழங்கப்படுவதாகவும், டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்தால், அதற்கான பரிசை வியாபாரிகள் பெறுவார்கள் என்றும், அடுத்த முறை அதிக கடன்களை பெறுவார்கள் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Tags:    

Similar News