செய்திகள்
கங்கனாவின் வீட்டின் ஒரு பகுதியை இடிக்கும் பணி

கங்கனா ரணாவத் வீட்டை இடிக்க இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்

Published On 2020-09-09 09:44 GMT   |   Update On 2020-09-09 09:44 GMT
மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதியை இடிக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியினருடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள தனது அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடிக்கலாம் என நடிகை கங்கனா ரணாவத் ஏற்கனவே அச்சம் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் மும்பை பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அவருக்கு நேற்று காலை நோட்டீஸ் வழங்கியது. நடிகையின் வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீட்டு வாசலில் அதிகாரிகள் நோட்டீசை ஒட்டிச்சென்றனர். 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் மும்பை மாநகராட்சி சார்பில் மீண்டும் கங்கனா வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 12.30 மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதியை இடிக்கும் பணியை தொடங்கினர்.

மும்பை மாநகராட்சியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில், கங்கனாவின் வக்கீல் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், நடிகை கங்கனா ரணாவத்தின் வீட்டை இடிக்க இடைக்கால தடை விதித்தது. அத்துடன், மனுதாரரின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

கங்கனா ரணாவத்துக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸ் சட்டவிரோதமானது மற்றும் அதிகாரிகள் சட்டவிரோதமாக வீட்டு வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். வீட்டு வளாகத்தில் தற்போது எந்த கட்டுமான வேலையும் நடைபெறவில்லை என கங்னா ரணாவத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

கங்கனா ரணாவத்தின் பங்களாவில் உரிய அனுமதி இல்லாமல் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாகவும், படிக்கட்டு பகுதியில் புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News