செய்திகள்
எல்லையில் இந்திய வீரர் (கோப்புப் படம்)

லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை - இந்திய ராணுவம் மறுப்பு

Published On 2020-09-08 05:45 GMT   |   Update On 2020-09-08 05:45 GMT
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. அண்மையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதில் இருந்தே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன.
 
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கின்றன. எனினும், பதற்றம் தணிந்தபாடில்லை. சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால், பதற்றம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.

இதற்கிடையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய- சீனா எல்லை பகுதியில் இந்திய தரப்பில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.

எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. சீனா ராணுவம் தான் வானில் துப்பாக்கி சூடு நடத்தியது என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News