செய்திகள்
சித்தராமையா

ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நிராகரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது: சித்தராமையா

Published On 2020-09-08 03:37 GMT   |   Update On 2020-09-08 03:37 GMT
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்ளிட்ட அனைத்தையும் நிராகரிப்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. அவர் பெங்களூருவில் இருந்தபடி நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களின் சொந்த ஊரில் இருந்தபடி கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எனது தலைமையில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். கர்நாடக சட்டசபை வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. இதில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 16-ந் தேதி மீண்டும் எனது தலைமையில் பெங்களூருவில் நடக்கவுள்ளது.

கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடு, போதைப்பொருள் நடமாட்டம், டி.ஜே.ஹள்ளியில் நடைபெற்ற கலவரம், சரக்கு-சேவை திட்டம் மற்றும் பல்வேறு சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளோம். போதைப்பொருள் நடமாட்டம் எல்லா ஆட்சி காலத்திலும் இருந்தது. எனது ஆட்சியில் இது இல்லை என்று கூறினால் அது தவறாகிவிடும்.

போதைப்பொருள் தடுப்பு போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள், நடிகர்-நடிகைகள், அரசியல்வாதிகள், அவர்களின் மகன்கள் உள்பட இந்த விவகாரத்தில் தொடர்பு உடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

ஆதாரங்கள் இருந்தால் யார் மீது வேண்டுமானாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும். நடிகை ராகிணி திவேதிக்கும், தங்கள் கட்சிக்கும் தொடர்பு கிடையாது என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். ஆனால் தேர்தலில் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார். இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து சட்டசபை கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.

போதைப்பொருள் விவகாரத்தில் எங்கள் கட்சியை சேர்ந்த ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.க்கு தொடர்பு உள்ளதா?. அவருக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தாலும் போலீசார் அதை வெளிப்படுத்தட்டும். அரசியல் நோக்கத்தில் அவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள். சட்டத்தை மீறியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும். இந்த விஷயத்தில் நாங்கள் எந்த குறுக்கீடும் செய்ய மாட்டோம்.

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் 8-வது இடத்தில் இருந்து 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆட்சி நடத்தியவர்கள் காரணம் என்று விஜயேந்திரா கூறியுள்ளார். கடந்த ஓராண்டாக பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?.

அரசு கஜானாவில் பணம் இல்லை என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். உலக வங்கியிடம் மத்திய அரசு கடன் பெற்று, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பு, மானியம் உள்ளிட்டவற்றுக்கு நிதி வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்ளிட்ட அனைத்தையும் நிராகரிப்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம். நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளதால், வேலை வாய்ப்புகள் உருவாகாது. நாட்டில் தற்போது 12 கோடி முதல் 15 கோடி வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தால், கர்நாடகத்தை சொர்க்கமாக மாற்றுவோம் என்று பா.ஜனதாவினர் கூறினர். இப்போது இது சொர்க்கமா? அல்லது நரகமா?.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News