செய்திகள்
ரியா சக்கரவர்த்தி

சுஷாந்த் மரண வழக்கில் அடுத்த திருப்பம்... சகோதரி மீது புகார் கொடுத்த ரியா

Published On 2020-09-07 11:16 GMT   |   Update On 2020-09-07 11:16 GMT
சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக அவரது சகோதரி மற்றும் டெல்லி மருத்துவமனை டாக்டர் ஆகியோர் மீது ரியா சக்ரவர்த்தி புகார் கொடுத்துள்ளார்.
மும்பை:

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

 ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் (என்சிபி) ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரியாவின் சகோதரர் ஷோயிக், மற்றும் சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டு என்சிபி காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ரியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவர் நேற்றும், இன்றும் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில், இந்த வழக்கின் புதிய திருப்பமாக ரியா சக்கரவர்த்தி மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சுஷாந்தின் சகோதரி பிரியங்கா மற்றும் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனை டாக்டர் தருண் குமார் உள்ளிட்டோர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யும்படி கூறி உள்ளார்.

‘டாக்டர் தருண் குமார் கொடுத்த மருந்து குறிப்பை பிரியங்கா சுஷாந்திற்கு அனுப்பியிருக்கிறார். எந்த ஆலோசனையும் இல்லாமல் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை சுஷாந்திற்கு பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. டாக்டர் பரிந்துரைத்த மருந்து, டெலிமெடிசின் பயிற்சி வழிகாட்டுதல்கள், 2020-ன் கீழ் மின்னணு முறையில் பரிந்துரைக்க தடை செய்யப்பட்டது. இந்த சட்டவிரோத மருந்தைப் பெற்ற ஐந்து நாட்களுக்குள் சுஷாந்த் இறந்துள்ளார். 

பிரியங்கா சிங், டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனை டாக்டர் தருண் குமார் மற்றும் சிலரின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும் இதுபோன்ற போலியான மற்றும் சட்டவிரோதமான மருந்துகளை வழங்க அவர்கள் எவ்வாறு முன்வந்தார்கள் என்பது குறித்தும் விசாரித்து கண்டறிய வேண்டும்.

சுஷாந்த் சிங் ஜூன் 8-ம் தேதி மும்பையில் இருந்தபோது, டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் புறநோயாளியாக வந்ததுபோன்று காட்டி, போலியாக மருந்துகளை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.’ என ரியா தனது மனுவில் கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் மும்பை குடியிருப்பில் இறந்ததற்கு ஆறு நாட்களுக்கு முன்னர், ஜூன் 8 தேதி அவருக்கும் அவரது சகோதரிக்கும் இடையிலான வாட்ஸ்அப் உரையாடல்களை அடிப்படையாக வைத்து இந்த புகாரை ரியா கொடுத்துள்ளார்.
Tags:    

Similar News