செய்திகள்
ப.சிதம்பரம்

கொரோனா ஊரடங்கால் நன்மை அடையாத நாடு இந்தியா - ப.சிதம்பரம் சொல்கிறார்

Published On 2020-09-06 01:12 GMT   |   Update On 2020-09-06 01:12 GMT
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் நன்மை அடையாத நாடு இந்தியாதான் என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. ஆனால் 31 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்து உள்ளனர்.

இந்த தருணத்தின் மத்திய அரசை தாக்கி முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இந்தியாவில் 55 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் என கணித்திருந்தேன். நான் சொன்னது தவறு. இந்தியா அந்தளவு எண்ணிக்கையை, செப்டம்பர் 20-ந் தேதிக்குள் அடைந்து விடும். செப்டம்பர் இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்தை தொட்டு விடும்.

ஊரடங்கு நடவடிக்கைகளின் நன்மையை அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியாதான் என்று தோன்றுகிறது.

21 நாளில் கொரோனா வைரசை தோற்கடித்து விடுவோம் என்று வாக்குறுதி அளித்த பிரதமர் மோடிதான், மற்ற நாடுகள் இதில் வெற்றிகண்டபோது இந்தியா மட்டும் ஏன் தோல்வி கண்டது என்பதை விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ப.சிதம்பரம் மற்றொரு டுவிட்டர் பதிவில் நிதி அமைச்சகத்தை சாடி உள்ளார். அதில் அவர், ‘‘2020-2021 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் எதிர்மறை வளர்ச்சியை அடைந்திருப்பதை விளக்க நிதி அமைச்சகத்திடம் ஒரு வார்த்தை இல்லை.

ஆனால் இந்திய மக்களை தவறாக வழிநடத்தும் பழைய விளையாட்டுக்கு திரும்பி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சரிவிலிருந்து மீண்டும் மீட்சி பெறுவோம் என்று கணித்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News