செய்திகள்
கைது செய்யப்பட்ட நபர்கள்

கொச்சியில் விமானம் தாங்கி கப்பலில் கணினி பாகங்கள் திருட்டு - பெயிண்டர்கள் 2 பேர் கைது

Published On 2020-09-05 21:41 GMT   |   Update On 2020-09-05 21:41 GMT
கொச்சியில் விமானம் தாங்கி கப்பலில் கணினி பாகங்கள் திருடப்பட்ட வழக்கில் பெயிண்டர்கள் 2 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி:

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல்கட்டும் தளத்தில் இந்திய ராணுவத்திற்கான விமானம் தாங்கி கப்பல் ஒன்று கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கப்பல் கட்டும் தளத்தில் பீகாரைச் சேர்ந்த சுமித்குமார் சிங், ராஜஸ்தானை சேர்ந்த தயா ராம் ஆகியோரும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்து வந்தனர். இவர்கள் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இவர்கள் இருவர் மீதும், கப்பலில் உள்ள கணினியின் உதிரி பாக கருவிகளை திருடியதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு (2019) ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான பணிக்காலத்தில் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இவர்கள் மீது, கொச்சி கப்பல்தளத்தின் ஐ.ஏ.சி. திட்ட துணை பொதுமேலாளர் கொடுத்த புகாரின்பேரில் எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பரில் வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் தேசிய புலனாய்வு பிரிவு இந்த வழக்கிற்கு பொறுப்பேற்று மறுவழக்காக பதிவு செய்தது.

9 மாத கால விரிவான புலன் விசாரணைக்குப் பின்பு இவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சொந்த ஊர்களுக்கு சென்று கைது செய்து அழைத்து வரப்பட்டனர். பணத் தேவைக்காக கப்பலில் இருந்த கணினி பாகங்களான புராசஸர், ராம், எஸ்.எஸ்.டி. கருவிகளை திருடியதாக கூறினர்.
Tags:    

Similar News