செய்திகள்
இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே

சீன எல்லையில் சவால்களை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் தயார்- ராணுவ தளபதி நரவானே பேட்டி

Published On 2020-09-04 07:09 GMT   |   Update On 2020-09-04 07:09 GMT
சீன எல்லையில் எல்லாவித சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

எல்லையில் சீன ராணுவம் கடந்த 29ம் தேதி இரவு மீண்டும் அத்துமீறி ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் ராணுவம் அறிவித்தது.

ஏற்கனவே பாங்காங் சோ ஏரியின் வட கரையில் பிரச்சனை உள்ள நிலையில், தென் கரையிலும் சீனா பிரச்சனை செய்ததால் பதற்றம் உருவாகியிருக்கிறது. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நேற்று லடாக்கின் லே பகுதிக்கு சென்றார். 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ள நரவானே, எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார். ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உண்மையான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) முழுவதும், சீன துருப்புக்களை எதிர்கொள்வதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் படையினரின் தயார் நிலையை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளுக்கு பிறகு லே பகுதிக்கு திரும்பிய ராணுவ தளபதி நரவானே கூறியதாவது:-

லே பகுதியை அடைந்த பிறகு நான் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தேன். அதிகாரிகளுடன் பேசினேன். வீரர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது. மேலும் அவர்கள் எல்லாவித சவால்களையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

எல்.ஐ.சி. பகுதி சற்று பதற்றமாக உள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளோம்.

எல்லையில் கடந்த 2-3 மாதங்கள் பதற்றமான சூழ்நிலை உள்ளது. பதற்றத்தை தணிக்க சீனாவுடன் ராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்காலத்திலும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். இந்த பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அத்துடன் எல்லையில் தற்போதுள்ள நிலை மாறாமல் இருப்பதை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News