செய்திகள்
ஜெகதீஷ் ஷெட்டர்

போதைப்பொருள் கும்பல் பணத்தால் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டதா?: மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி

Published On 2020-09-02 02:57 GMT   |   Update On 2020-09-02 02:57 GMT
குமாரசாமி ஆட்சி காலத்தில் போதைப்பொருள் கும்பல் இருக்கவில்லையா?. இதுகுறித்து உளவுத்துறை தகவல் வழங்கவில்லையா?. போதைப்பொருள் கும்பல் பணத்தால் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் பதிலளித்துள்ளார்.
யாதகிரி :

தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் யாதகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போதைப்பொருள் கும்பலின் பணத்தால் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதை அவர் அப்போதே கூறியிருக்க வேண்டும். இப்போது தான் அது அவரது நினைவுக்கு வருகிறதா?. சித்தராமையாவின் சதியால் கூட்டணி அரசு கவிழ்ந்ததாக அவர் கூறுகிறார்.

காலத்திற்கு ஏற்றார் போல் அவ்வப்போது வெளியாகும் தகவலின் அடிப்படையில் குமாரசாமி தனது கருத்தை மாற்றிக்கொள்கிறார். அவரது இத்தகைய கருத்துகளுக்கு மதிப்பு கிடையாது. குமாரசாமி ஆட்சி காலத்தில் போதைப்பொருள் கும்பல் இருக்கவில்லையா?. இதுகுறித்து உளவுத்துறை தகவல் வழங்கவில்லையா?. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது இதுபற்றி அவர் பேசியிருக்க வேண்டும்.

போதைப்பொருள் கும்பல் விஷயத்தில் அரசு எந்தவித அழுத்தத்திற்கும் அடிபணியாது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் கும்பலை ஒடுக்க போலீஸ் துறை அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

இவ்வாறு ஜெகதீஷ்ஷெட்டர் கூறினார்.
Tags:    

Similar News