செய்திகள்
எடியூரப்பா, டிகே சிவக்குமார், சித்தராமையா,

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு கர்நாடக தலைவர்கள் இரங்கல்

Published On 2020-09-01 03:48 GMT   |   Update On 2020-09-01 03:48 GMT
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு கர்நாடக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் சிறந்த தலைவரை நாடு இழந்து தவிப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா புகழாரம் சூட்டி உள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “பிரணாப் முகர்ஜி மிக சிறந்த தலைவர். அவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சிறந்த தலைவரை நாடு இழந்து தவிக்கிறது. அவருடன் நான் நட்பில் இருந்தபோது உரையாடிய நினைவுகளை அசை போட்டு இரங்கல் தெரிவிக்கிறேன்“ என்றார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். பல ஆண்டுகளாக நாங்கள் நட்பில் இருந்தோம். அவரது கூர்மையான அறிவாற்றலுடன் கடுமையான உழைப்பை நான் எப்போதும் பாராட்டியுள்ளேன். அவரது ஆன்மா அமைதி பெறட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டரில், “முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் மத்திய மந்திரி, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு செய்தி கேட்டு துக்கம் அடைந்தேன். நிதி, வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தபோது அவர் ஆற்றிய சேவையை நாடு எப்போதும் நினைவுகூறும். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் டுவிட்டரில் இரங்கல் பதிவை வெளியிட்டு, “முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். வரலாறு, அரசியல் அமைப்பு மற்றும் சட்டத்துறையில் அபாரமான அறிவாற்றல் கொண்டவராக இருந்த அவரை நாடு இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டரில், “எளிமையான குணநலன் கொண்ட அரசியல்வாதியான, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய பெரிய தலைவர் மரணத்தால் நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News