செய்திகள்
நீர்மூழ்கி கப்பல்கள் - கோப்புப்படம்

இந்திய கடற்படைக்கு 6 புதிய நீர்மூழ்கி கப்பல்கள் - உள்நாட்டில் கட்டுவதற்கு நடவடிக்கை

Published On 2020-08-30 22:32 GMT   |   Update On 2020-08-30 22:32 GMT
ரூ.55 ஆயிரம் கோடி மதிப்பில், இந்திய கடற்படைக்கு 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
புதுடெல்லி:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் சீனாவின் கடற்படை மிகுந்த வலிமை உள்ள ஒன்றாக உள்ளது. சீன கடற்படையிடம் 50-க்கும் மேற்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், சுமார் 350 போர்க்கப்பல்கள் இருப்பதாக சர்வதேச கடற்படை நோக்கர்கள் கூறுகின்றனர்.

சீனா தொடர்ந்து ஆயுத போட்டியில் தீவிரம் காட்டி வருவதால் இன்னும் 8-10 ஆண்டுகளில் இவற்றின் கூட்டு எண்ணிக்கை 500-ஐ தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கடற்படையின் கொல்லைப்புறமாக இந்திய பெருங்கடல் கருதப்படுகிறது. இது, இந்தியாவின் ராணுவ நலன்களுக்கு மிக முக்கியமானது. ஆனால், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தனது ராணுவ இருப்பை அதிகரிப்பதற்கான முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு இந்தியாவும், தனது கடற்படையின் ஒட்டுமொத்த திறன்களை கணிசமான அளவில் உயர்த்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது இந்திய கடற்படை, 6 அணுசக்தி தாக்குதல் நீர் மூழ்கி கப்பல்கள் உள்பட 24 புதிய நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்திய கடற்படையிடம் 15 மரபு சார்ந்த நீர் மூழ்கி கப்பல்களும், 2 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ஆனாலும் சீனாவுடன் ஒப்பிடுகையில் நம்மிடம் இடைவெளி நிலவுவதால், அதை ஈடுகட்ட இந்தியா விரும்புகிறது.

கடற்படைக்கான 57 போர் விமானங்கள், 111 கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள், 123 பன்னோக்கு பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை ராஜீய நட்புறவு அடிப்படையிலான திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்வதற்கான பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

தற்போது ரூ.55 ஆயிரம் கோடி மதிப்பில் 6 மரபுசார் நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் கட்டுவதற்கான மெகா திட்டத்துக்கான ஏல நடவடிக்கைகளை இந்தியா தொடங்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த 6 மரபுசார் நீர்மூழ்கி கப்பல்களும், ராஜீய நட்புறவு அடிப்படையில் இந்தியாவில் கட்டப்படும். இதில் உள்நாட்டு நிறுவனங்கள், முன்னணி வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுடன் கரம் கோர்த்து செயல்படும். இதனால் இறக்குமதியை சார்ந்திருப்பது குறையும்.

இந்த நீர் மூழ்கி கப்பல்களின் விவரக்குறிப்புகள், பிற முக்கியமான தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ’பி- 75-1’ என பெயரிடப்பட்டுள்ள மெகா திட்டத்துக்கான ஆர்.எப்.பி. என்னும் முன்மொழிவு கோரிக்கைகளை வெளியிடுவதற்கான பணிகள், ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய கடற்படையின் தனி குழுக்களால் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவு கோரிக்கைகள் அக்டோபர் மாதத்துக்குள் விடப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நீர் மூழ்கி கப்பல் கட்டும் திட்டத்துக்காக ராணுவ அமைச்சகம், உள்நாட்டில் 2 கப்பல் கட்டும் நிறுவனங்களையும், 5 வெளிநாட்டு ராணுவ நிறுவனங்களையும் பட்டியலிட்டு வைத்துள்ளது. இது ‘மேக் இன் இந்தியா’ என்னும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் கூட்டு திட்டமாக நிறைவேற்றப்படும்.

எல் அண்ட் டி குழுமம் மற்றும் அரசு துறை நிறுவனமான மசாகான் டாக்ஸ் நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்கள்தான் இறுதி செய்து பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் ஆகும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியலில் ஜெர்மனியின் தைசென்குரூப் மரைன் சிஸ்டம்ஸ், ஸ்பெயினின் நவந்தியா, பிரான்சின் நவல் குழுமம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.

முதலில், பாதுகாப்பு அமைச்சகம் ஆர்.எப்.பி. என்னும் முன்மொழிவு கோரிக்கையை எல் அண்ட் டி குழுமம் மற்றும் மசாகான் டாக்ஸ் நிறுவனத்துக்கு வெளியிடும். அதன்பின்னர் அவ்விரு நிறுவனங்களும் சேர்ந்து பட்டியலிடப்பட்டுள்ள 5 நிறுவனங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News