செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

திருப்பதியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

Published On 2020-08-29 09:10 GMT   |   Update On 2020-08-29 09:10 GMT
திருமலை, திருப்பதி மட்டுமின்றி சித்தூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் பரத் நாராயண குப்தா கூறியுள்ளார்.
திருப்பதி:

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வந்த பெரிய ஜீயர், அர்ச்சகர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பணியாளர்கள் என 750 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருப்பதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 68 பேர் மட்டுமே கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சையில் உள்ளனர். 2 அர்ச்சகர்கள், 2 கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், தோட்டக்கலைத்துறையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர் என 5 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் சித்தூர் மாவட்ட கலெக்டர் பரத் நாராயண குப்தா சுகாதார குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி நகரில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் நிலையை கவனிக்கும் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது தெரியவருகிறது.

தேவஸ்தானம் அமைத்துள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் பல படுக்கைகள் காலியாக உள்ளன.

தற்போது வரை கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களில் 68 ஊழியர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தேறி வருகிறது.

திருமலையில் பணிபுரியும் அவுட்சோர்சிங் படையினர் உள்பட 2,800 பேருக்கு இன்னும் 2 நாட்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதில் தொற்று கண்டறியப்படுவோருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்.

இதுவரை தேவஸ்தானம் வழங்கிய நிதி மூலம் ரூ.11 கோடியில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் ரூ.8 கோடியில் உபகரணங்கள் வாங்கப்படும்.

திருமலை, திருப்பதி மட்டுமின்றி சித்தூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.
Tags:    

Similar News