செய்திகள்
கிரிஷன் பால் குர்ஜார்

மத்திய அரசை மிரட்டும் கொரோனா - சமூக நீதித்துறை இணை மந்திரிக்கும் தொற்று உறுதி

Published On 2020-08-27 19:13 GMT   |   Update On 2020-08-27 19:13 GMT
மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று மேலும் ஒரு மந்திரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சண்டிகர்:

மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று மேலும் ஒரு மந்திரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மத்திய அரசு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் மிகுந்த நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் புதிய நோயாளிகளும், ஏராளமான மரணங்களுக்கும் இந்த தொற்று காரணமாகி வருகிறது. இதனால் மக்களிடையே நிலவி வரும் பீதி இன்னும் விலகவில்லை.

இது ஒருபுறம் இருக்க, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு ஒருபடி மேலாக மத்திய மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் மந்திரிகள் கூட தொடர்ந்து கொரோனாவிடம் சிக்கி வருகின்றனர்.

உள்துறை மந்திரி அமித்ஷா, பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான், ஜலசக்தி மந்திரி ஷெகாவத், ஆயுஷ் மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் சில இணை மந்திரிகள் என இந்த பட்டியல் நீண்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு இணை மந்திரி கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்.

அந்தவகையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியும், அரியானாவின் பரிதாபாத் தொகுதி எம்.பி.யுமான கிரிஷன் பால் குர்ஜாருக்கு (வயது 63) நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனக்கு தீவிரமான சில உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். இதில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே டாக்டர்களின் அறிவுரையின் பேரில் சிகிச்சை எடுத்து வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரேனாவை தீவிரமாக எடுத்துக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

அரியானாவில் கொரோனா தொற்று தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இதில் மாநிலத்தின் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் உள்பட 8 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 பா.ஜனதா எம்.பி.க்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவும் வீட்டு தனிமையில் இருப்பதாக அறிவித்து உள்ளார். சமீபத்தில் அவரை சந்தித்த ஒரு நபருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து கொரோனா தொற்றில் சிக்கி வருவது மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொற்றை தடுக்க மந்திரிகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News