செய்திகள்
தேவகவுடா

கல்வி கொள்கையில் இருக்கும் பிரச்சினைகளை மாநிலங்களவையில் பேசுவேன்: தேவேகவுடா

Published On 2020-08-27 02:41 GMT   |   Update On 2020-08-27 02:41 GMT
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள கல்வி கொள்கையில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து மாநிலங்களவையில் பேசுவேன் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பால் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக நேற்று காலையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆதரவு அளித்ததுடன், போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த போராட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் தேவகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினை உள்பட இன்னும் பல பிரச்சினைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசு உடனடியாக முன்வர வேண்டும். ஆசிரியர்களுக்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. கர்நாடக அரசும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. புதிய கல்விக் கொள்கையில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன.

அந்த பிரச்சினைகள் பற்றி மாநிலங்களவையில் பேச உள்ளேன். அப்போது புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி விளக்கமாக பேச முடிவு செய்துள்ளேன். தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனை காக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும். இதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளேன். மீண்டும் ஒரு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன். ஊரடங்கால் ஆசிரியர்கள் சந்தித்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மாநிலங்களவையிலும் பேச உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News