செய்திகள்
கபில் சிபல்

காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யுமாறு கடிதம் எழுதியது ஏன்?: கபில் சிபல் விளக்கம்

Published On 2020-08-26 02:42 GMT   |   Update On 2020-08-26 02:42 GMT
காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு சோனியாவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக கபில் சிபல் விளக்கம் அளித்து உள்ளார்.
புதுடெல்லி :

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக அவரால் கட்சியை சுறுசுறுப்பாக வழிநடத்த முடியவில்லை என்று கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கருதுவதாக தெரிகிறது.

எனவே கட்சிக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய தலைவர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். கட்சியின் காரிய கமிட்டி மற்றும் பல்வேறு அமைப்புகளை சீரமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த விவகாரம் காங்கிரசுக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கடிதம் கிடைத்ததை தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா காந்தி விருப்பம் தெரிவித்தார். இது தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் 23 தலைவர்களின் கடித விவகாரம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய ராகுல் காந்தி, அந்த தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

முன்னதாக காரிய கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய சோனியா, கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மற்ற தலைவர்கள், சோனியாவே கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் எனவும், 6 மாதங்களுக்குள் கட்சியின் மாநாட்டை நடத்தி புதிய தலைவர் தேர்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். பின்னர் இதை தீர்மானமாகவும் நிறைவேற்றினர்.

இந்த நிலையில் காங்கிரசுக்கு சுறுசுறுப்பான தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என சோனியாவுக்கு கடிதம் எழுதியதற்கான காரணம் குறித்து, மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் நேற்று சூசகமாக கருத்து ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான அவர் இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘இது ஒரு பதவியை பற்றியது அல்ல. மாறாக எனது நாட்டை பற்றியது’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து மேலும் விரிவாக எதுவும் அவர் கூறவில்லை.

இதன்மூலம் நாட்டு நலனுக்காகவே காங்கிரசுக்கு புதிய தலைவர் தேவை என்ற நோக்கில் 23 தலைவர்களும் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News