செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

இருசக்கர வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி.யை குறைக்க பரிசீலனை - நிர்மலா சீதாராமன் தகவல்

Published On 2020-08-25 20:33 GMT   |   Update On 2020-08-25 20:33 GMT
இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைப்பது பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி:

இந்திய தொழில்துறை தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் பேசியதாவது:-

கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களுக்கு மத்திய அரசு முதல் முன்னுரிமை அளிக்கிறது. அதனால்தான், கொரோனாவை சமாளிக்க அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு அறிவிப்பிலும் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை நீங்கள் காணலாம். அதன் பயனாக பொருளாதார மீட்பு நடவடிக்கையில் இந்த சீர்திருத்தங்கள் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

தற்போதைய சிக்கலில் இருந்து விடுபட அரசுக்கும், தொழில் துறையினருக்கும் இடையே முன்மாதிரியான ஒத்துழைப்பு நிலவ இதைவிட சிறப்பான நேரம் கிடைக்காது.

இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என்பது நல்ல யோசனை. அது ஆடம்பர பொருளோ, போதைப்பொருளோ அல்ல. வரி குறைப்புக்கு தகுதியான பொருள். எனவே, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.

சுற்றுலா, ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், விமான நிறுவனங்கள் ஆகியவை கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இவை பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான துறைகள். இவற்றின் பாதிப்பை தணிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

தனியார் துறைகளை ஊக்குவிக்க கடந்த ஆண்டு கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா பரவத் தொடங்கியதால், அந்நிறுவனங்கள் முதலீட்டை பெருக்கவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், அவை முதலீடு செய்ய வேண்டும்.

தொழில்துறையினருக்கு அரசு துறைகள் பண பாக்கியை கொடுப்பதை மத்திய நிதி அமைச்சகம் விரைவுபடுத்தும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
Tags:    

Similar News