செய்திகள்
2,000 ரூபாய் நோட்டு

2019-20-ம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை - ரிசர்வ் வங்கி

Published On 2020-08-25 15:58 GMT   |   Update On 2020-08-25 15:58 GMT
நடப்பு நிதியாண்டில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எதுவும் அச்சிடப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகம் பதுக்கப்படுவதாகவும், கள்ள நோட்டுகளாக வலம் வருவதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன. எனவே இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், ரூ.2,000 நோட்டுகள் ரத்து செய்யப்படும் என்ற செய்தியும் பரவியது. 

இச்செய்தியை மறுத்த ரிசர்வ் வங்கி, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகள் நோட்டுகள் நீக்கப்படாது . புதிதாக அச்சிடுவதை வேண்டுமானால் நிறுத்துவதாக தெரிவித்திருந்தது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டான 2019-20-ம் ஆண்டில் ஒரு 2,000 ரூபாய் நோட்டு கூட அச்சிடப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டிற்கான ஆண்டு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வரும் அமைப்புகள் சென்ற ஆண்டில் ஒரு நோட்டைக் கூட அச்சிடவில்லை. ஒட்டுமொத்த ரூபாய் புழக்கத்தில் 2,000 நோட்டுகளின் பங்கைக் குறைக்கும் நோக்கத்தில்தான் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. 

2016-17ம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 50 சதவீதமாக இருந்தது. அது 2019-20ம் ஆண்டில் 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News