செய்திகள்
அஸ்வத் நாராயண்

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயார்: அஸ்வத் நாராயண்

Published On 2020-08-25 03:26 GMT   |   Update On 2020-08-25 03:26 GMT
கர்நாடகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யவும் அரசு தயாராக இருப்பதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்துவது மற்றும் புதிய கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து இணையதளம் மூலமான கருத்தரங்கு பெங்களூரு பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடக்கிறது.

இந்த கருத்தரங்கின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கர்நாடக உயர் கல்வித்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயண் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது;-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி உள்ளது. இந்த தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாக கர்நாடகம் இருக்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொள்கிறேன். அதற்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கர்நாடக அரசும் வலியுறுத்தி வந்தது. புதிய கல்விக் கொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்த உயர்மட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உயர்மட்ட குழுவுடன் பல முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அந்த குழு, கர்நாடகத்தில் புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்தும்படி அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அந்த குழு இறுதியாக ஆலோசனை நடத்திவிட்டு, முழுமையான பரிந்துரைகளை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது. கூடிய விரைவில் முழு பரிந்துரையை அந்த குழுவினர் அரசிடம் அளிக்க உள்ளனர்.

உயர்மட்ட குழுவினர் அரசிடம் முழுமையான அறிக்கை அளித்த பின்பு, அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள், புதிய கல்விக் கொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்த தேவைப்பட்டால், இதற்கு முந்தைய சட்டங்களில் திருத்தம் செய்யவும் அரசு தயாராக இருக்கிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் புதிய தேசிய கல்விக் கொள்கையை பற்றி மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முழு விவரங்கள் தெரிவிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கையை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதனால் கல்வியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் தெரிவிக்கப்படும். கர்நாடகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம், மாநிலத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுவது உண்மை தான். இந்த புதிய கல்விக் கொள்கை கர்நாடகத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இனிவரும் நாட்களில் தரமான கல்வியை புகட்டுவதன் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வியால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது நிரூபணமாக உள்ளது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.
Tags:    

Similar News