செய்திகள்
கோப்பு படம்

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள இணையதளபக்கம்

Published On 2020-08-22 20:28 GMT   |   Update On 2020-08-22 20:28 GMT
கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள இந்தியாவில் இணையதள பக்கம் விரைவில் உருவாக்கப்பட உள்ளது.
புதுடெல்லி: 

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ரஷியா தாங்கள் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து பதிவு செய்து விட்டோம் என தெரிவித்துள்ளது. 

இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா என பல்வேறு நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையில், இந்தியாவும் கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 3-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தற்போது மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் களமிறங்கியுள்ளன. 

அதிலும் ஒரு தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெறும் பட்சத்தில் அது உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும்.

ஆனால், இந்தியாவில் உருவாக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் குறித்த முழுமையான மற்றும் தெளிவான தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. 

இதனால் தடுப்பூசி தயாரிப்பின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியாமலேயே உள்ளது. 

இந்நிலையில், இந்த குறைபாடுகளை நீக்கும் விதமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் தடுப்பூசி பரிசோதனையின் தற்போதைய நிலை உள்பட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் சுலமபாக பெறும் விதமாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் ஒன்று துவங்கப்பட உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்த இணையதள பக்கம் அடுத்த வாரம் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களுக்கும் அந்த நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பான தகவல்களும் இந்த இணையதள பக்கத்தில் முழுமையாக வெளியிடப்படும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News