செய்திகள்
தெலுங்கானா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்

தெலுங்கானாவில் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து -9 பேரை மீட்கும் பணி தீவிரம்

Published On 2020-08-21 04:09 GMT   |   Update On 2020-08-21 04:09 GMT
தெலுங்கானாவின் ஸ்ரீசைலத்தில் உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீசைலம்:

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். தீ சூழ்ந்ததால் சில ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 6 பேருக்கு மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 9 பேர் மின் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிய உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

இதுபற்றி தெலுங்கானா அமைச்சர் ஜி.ஜகதீஷ்வர் ரெட்டி கூறுகையில் ‘நேற்று இரவு 10:30 மணியளவில் யூனிட் 1-ல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பத்து பேர் மட்டும் வெளியே வர முடிந்தது. ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க சிங்காரேனி நிலக்கரி சுரங்கத்தின் உதவியைப் பெற முயற்சி மேற்கொள்கிறோம். ஏனெனில் இதுபோன்ற சூழ்நிலையை கையாள்வதில் அவர்களுக்கு நிபுணத்துவம் இருக்கலாம். ஆலைக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கே இப்போது முன்னுரிமை கொடுக்கப்படுகிறது’ என்றார்.

Tags:    

Similar News