செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா பரிசோதனையில் முதல் இடம் பிடித்த உத்தரபிரதேசம்

Published On 2020-08-19 18:57 GMT   |   Update On 2020-08-19 18:57 GMT
கொரோனா பரிசோதனையில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தை பிடித்தது. அங்கு பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது.
லக்னோ:

நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு பாரதீய ஜனதா முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

தினமும் 1 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த எண்ணிக்கையை 1¼ லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனம் 10 லட்சம் பேருக்கு 140 மாதிரி பரிசோதனைகள் என்ற அளவில் தினமும் நடத்த வேண்டும் என்று நிர்ணயித்து உள்ளது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தினமும் 32 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். இப்போது அதை மிஞ்சி உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பரிசோதனைகள் செய்த மாநிலம் என்ற பெயரை அந்த மாநிலம் தட்டிச்சென்று உள்ளது. அதுவரை இந்த சிறப்பை தமிழகம்தான் பெற்றிருந்தது. அங்கு 35 லட்சத்தை கடந்தபோதே, பரிசோதனையில் முதல் இடம் என்ற பெயர் அந்த மாநிலத்துக்கு கிடைத்து விட்டது.

இதுபற்றி அன்று மாநில செய்தித்துறை இயக்குனர் சிஷிர் டுவிட்டரில் அன்று வெளியிட்ட பதிவில், “மற்றொரு மைல்கல்லை மாநிலம் எட்டியுள்ளது. கொரோனா பரிசோதனையில், உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 35 லட்சத்து 97 ஆயிரத்து 233” என குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அந்த எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து உள்ளது.

இதையொட்டி கூடுதல் தலைமை செயலாளர் (தகவல்) அவானிஷ் அவஸ்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “40 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, தற்போது உத்தரபிரதேச மாநிலம் கொரோனா பரிசோதனையில் முதல் இடத்தில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “நேற்று (18-ந் தேதி) 1 லட்சத்து 7 ஆயிரத்து 768 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை என்பது 40 லட்சத்து 75 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News