செய்திகள்
கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான்

ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு- பெங்களூரு டாக்டர் கைது

Published On 2020-08-19 04:18 GMT   |   Update On 2020-08-19 04:18 GMT
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக பெங்களூரு டாக்டரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

பெங்களூருவில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான் என்ற 28 வயது இளைஞர், ஐஎஸ் கோரசன் மாகாண (ஐஎஸ்கேபி) வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டுள்ளார். 

ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், பயங்கரவாதிகளுக்கு  உதவ மருத்துவ மற்றும் ஆயுதம் தொடர்பான பயன்பாடுகளை உருவாக்குவதற்கும், நாட்டில் அதன் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கும் பணியாற்றியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டெல்லியிலுள்ள ஜாமியா நகரில் உள்ள ஓக்லா விஹாரில் வசித்து வந்த ஜஹான்சைப் சமி வாணி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் ஆகிய காஷ்மீரைச் சேர்ந்த தம்பதியினரை என்.ஐ.ஏ கைது செய்து விசாரித்த நிலையில், அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், அப்துர் ரஹ்மான் கைது செய்யப்பட்டுள்ளார். 

​​கைது செய்யப்பட்ட ரஹ்மான், குற்றம் சாட்டப்பட்ட சமி மற்றும் சிரியாவைச் சேர்ந்த பிற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்தார். போரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவும் குழுவில் இருந்தார் என்று என்ஐஏ செய்தித் தொடர்பாளர் சோனியா நாரங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஹ்மான் சிரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், பயங்கரவாதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் மருத்துவ முகாமுக்கு 10 நாட்கள் சென்று இந்தியா திரும்பியது தெரியவந்ததாகவும் என்.ஐ.ஏ கூறி உள்ளது.

ரஹ்மான் கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், டிஜிட்டல் சாதனங்கள், மொபைல் போன், முக்கிய தகவல்களை உள்ளடக்கிய லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக செய்தித் தெடார்பாளர் நாரங் கூறினார்.

ரஹ்மான் மற்றும் காஷ்மீர் தம்பதியரைத் தவிர, புனேவில் வசிக்கும் சாதியா அன்வர் ஷேக் மற்றும் நபீல் சித்திக் காத்ரி ஆகிய இருவரையும் என்ஐஏ கைது செய்துள்ளது. இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் / ஐ.எஸ்.கே.பி. சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருப்பதாகவும், சிஏஏ ஆர்ப்பாட்டத்தின் பேரில் மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் மீது 
குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News