செய்திகள்
ஆன்லைன் வகுப்பு

94 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை - ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் சிக்கல்

Published On 2020-08-18 00:01 GMT   |   Update On 2020-08-18 00:01 GMT
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 94 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் அல்லது இணையதள வசதி இல்லை என தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவுக்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு பள்ளி, கல்லூரி வகுப்புகளை ஆன்லைன் முறைக்கு தள்ளி இருக்கிறது. இதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள இணைப்பு போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன.

இந்த வசதிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் நிலையில் மாணவர்கள் உள்ளனரா? என தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 தென்னக மாநிலங்களில் குழந்தைகள் உரிமை அமைப்பான ‘க்ரை’ ஆய்வு நடத்தியது. இதில் 11 முதல் 18 வயது வரையிலான 5,987 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் இந்த மாநிலங்களை சேர்ந்த 94 சதவீத மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அல்லது இணையதள வசதி இல்லை என தெரியவந்துள்ளது. 6 சதவீத மாணவர்களுக்கே ஸ்மார்ட்போன்கள் உள்ளன. 29 சதவீதத்தினர் தங்கள் குடும்பத்தினரின் போன்களை பயன்படுத்துகின்றனர். அதுவும் இதில் 55 சதவீதத்தினர் வாரத்துக்கு 3 அல்லது அதற்கு குறைவான நாள்கள்தான் போன்களை பயன்படுத்த முடியும். 77 சதவீதம் பேர் நாளொன்றுக்கு 2 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே போன்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆய்வு முடிவுகள் மிகுந்த கவலை அளிப்பதாக கூறியுள்ள ‘க்ரை’ நிர்வாகிகள், இதனால் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News