செய்திகள்
கோழிக்கோடு விமான விபத்து

கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Published On 2020-08-15 09:31 GMT   |   Update On 2020-08-15 09:31 GMT
விமான விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட உத்தரவிடக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

விமானம் தரையிறங்கும்போது பெய்த கனமழை மற்றும் ஓடுதளத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கருத்துக்கள் நிலவின. விமானியின் தன்னிச்சையான முடிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது. 

இந்த விபத்து காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,விமானத்தின் கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமான விபத்து விசாரணை முகைமை 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த குழு தனது விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 5 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விமான விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட உத்தரவிடக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

விமான விபத்து விசாரணை முகைமை மேற்கொண்டுவரும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விபத்து தொடர்பான விசாரணையை நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் சுதந்திரமான பாரபட்சமின்றியும் நடத்த உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்துக்கான காரணம் 
குறித்த விசாரணையை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரியும் இந்த பொது நலவழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரள நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த பொதுநல வழக்கு கூடிய விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News