செய்திகள்
பிரணாப் முகர்ஜி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை - ராணுவ மருத்துவமனை

Published On 2020-08-15 08:19 GMT   |   Update On 2020-08-15 08:19 GMT
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் தவறி விழுந்தார். 

இதில் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டு இடது கை உணர்ச்சியற்ற நிலையில் இருந்ததால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரணாப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையும், மூளையில் ரத்தக்கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து ரத்தக்கட்டியை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தக்கட்டி நீக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் காரணமாக பிரணாப்பின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.

இதையடுத்து, கோமா நிலைக்கு சென்ற பிரணாப் முகர்ஜிக்கு செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ராணுவ மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது. 

அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடனேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சிறப்பு மருத்துவக்குழுவினர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News