செய்திகள்
வெட்டி விற்க முயன்ற 20 அடி நீள திமிங்க சுறாவை காணலாம்.

திமிங்கல சுறாவை வெட்டி விற்க முயற்சி- 2 பேர் சிக்கினர்

Published On 2020-08-14 14:16 GMT   |   Update On 2020-08-14 14:16 GMT
2 ஆயிரம் எடை கொண்ட திமிங்கல சுறா மீனை வெட்டி விற்க முயன்ற சம்பவத்தில் 2 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:

மும்பை கொலபாவில் உள்ள சசூன் டாக்கில் சட்டவிரோதமாக திமிங்கல சுறா மீன் விற்பனை செய்யப்பட உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திமிங்கல சுறா மீன் பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினம் ஆகும். இதையடுத்து நேற்று முன்தினம் வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு வெட்டப்பட்ட நிலையில் சுமார் 20 அடி நீளம், 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட திமிங்கல சுறா மீன் மீட்கப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் வனத்துறையினர் வருவதை அறிந்து அந்த மீனை பிடித்து வந்தவர்கள் மற்றும் வியாபாரி தப்பியோடியது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி சுரேஷ் வாரக் கூறுகையில், “திமிங்கல சுறாவை பிடித்து வந்த மீனவர்கள் தப்பி சென்று விட்டனர். அதை விற்பனை செய்யும் நோக்கத்துடன் வியாபாரி அதை வெட்டி உள்ளார். நாங்கள் வந்தது தெரிந்தவுடன் வியாபாரியும் தப்பிவிட்டார். நாங்கள் அந்த மீனை வாங்க இருந்த ஜன்பகதூர் (வயது50), டெம்போ டிரைவர் ஷாம் ராஜாராம் (35) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மீனை பிடித்து வந்தவர்கள், விற்பனை செய்ய முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்த சம்பவம் குறித்து மாநில மீன்வளத்துறையும் விசாரணையை தொடங்கி உள்ளது.
Tags:    

Similar News