செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

ரஷியாவின் முதல் தடுப்பூசி இவருக்கு போடப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2020-08-14 04:09 GMT   |   Update On 2020-08-14 04:09 GMT
கொரோனாவைரஸ் பாதிப்பை சரிசெய்யும் ரஷியாவின் தடுப்பூசி முதலில் இவருக்கு தான் போடப்பட்டது என கூறி வீடியோ வைரலாகி வருகிறது.

உலகம் முழுக்க கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவைரசை தடுத்து நிறுத்த முதல் தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக ரஷியா அறிவித்தது. இது உலக அரங்கில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

“கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசி தானாக போட்டுக்கொள்ள முன்வருவோருக்கு போடப்படும். ஏற்கனவே ஏறத்தாழ 20 சதவீத டாக்டர்கள் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி தேவைப்படாது” என ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ கூறினார்.

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி ஸ்புட்நிக் வி என பெயரிடப்பட்டு உள்ளது. இது ரஷியா விண்ணில் ஏவிய உலகின் முதல் செயற்கைக்கோளுக்கு சூட்டப்பட்ட பெயர் ஆகும். இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி ரஷிய அதிபர் புதினின் மகளுக்கு போடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில், ரஷியாவின் கொரோனாவைரஸ் தடுப்பூசி முதலில் அதிபர் விளாடிமிர் புதின் மகளுக்கு தான் போடப்பட்டது என கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவை ஆய்வு செய்த போது, அதில் தடுப்பூசியை எடுத்துக் கொள்வது அதிபர் புதின் மகள் இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும் இதுபற்றிய தேடல்களில் வைரல் வீடியோவில் உள்ள காட்சிகள் அடங்கிய வீடியோ பல்வேறு சேனல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோவில் தடுப்பூசியை எடுத்துக் கொண்டது புதின் மகள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்கள் சரியாக வெளியிடப்படவில்லை என உலக நாடுகள் கூறி வருகின்றன. மேலும் கொரோனா தடுப்பூசி மிகக்கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்து உள்ளது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News