செய்திகள்
பிரதமர் மோடி

தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி

Published On 2020-08-13 21:24 GMT   |   Update On 2020-08-13 21:24 GMT
வரிவிதிப்பு தொடர்பான புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறினார்.
புதுடெல்லி:

பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டபடி, நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில், ‘ஒளிவு மறைவற்ற வரி விதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

நியாயமான மற்றும் எளிமையான வரி விதிப்பு மத்திய அரசின் முக்கிய கொள்கையாக உள்ளது. சட்டமும், கொள்கைகளும் மக்களை மையமாக கொண்டதாக இருக்கவேண்டும்.

வரி செலுத்தும் முறையை எளிமையாக்கும் வகையிலும், நேர்மையாக வரி செலுத்துபவர்களை கவுரவிக்கும் வகையிலும் பல்வேறு சீர்திருத்தங்களுடன் இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. ஆன்லைன் மூலமாக நேர்மையாகவும், அச்சமின்றியும் வரி செலுத்த இது வகை செய்கிறது.

வரி செலுத்தும் நடவடிக்கை ஒருங்கிணைந்த கம்ப்யூட்டர் முறையில் இணைக்கப்படுவதால், அதிகாரிகள் வரி செலுத்துவோரிடம் ஏதாவது விளக்கம் கேட்டாலும் அவர்கள் வருமான வரி அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல், எந்த அதிகாரியையும் சந்திக்காமல் ஆன்லைன் மூலம் உரிய பதில் அளிக்கலாம். வரி விதிப்பு, வரி வசூல், ரீபண்ட் ஆகியவை ஆன்லைன் மூலமே நடைபெற இது வகை செய்கிறது.

விதிமுறைகளில் நிறைய சிக்கல்கள் இருந்தால் அதை கடைபிடிப்பது சிரமம். சட்டம் தெளிவாக இருந்தால் வரி செலுத்துவோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்; நாடும் மகிழ்ச்சியாக இருக்கும்.

வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்துவதன் மூலம் புதிதாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். நேர்மையாக வரி செலுத்துவோர் பாராட்டுக்கு உரியவர்கள். நேர்மையாக வரி செலுத்துவோர் மத்திய அரசின் வரி விதிப்பு முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும். வரிச் சலுகைக்கு குறுக்கு வழியை பின்பற்றுபவர்கள் முன்னேற்றம் காண முடியாது.

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் இந்த திட்டம் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மிகவும் குறைந்த அளவாக1½ கோடி பேர்தான் வருமான வரி செலுத்தும் நிலை இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2½ கோடியாக அதிகரித்து இருக்கிறது. வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ள அனைவரும் நேர்மையுடன் தாமாக முன்வந்து வரியை செலுத்தவேண்டும். மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு வரிவிதிப்பு முறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து வரி தொடர்பான 3 லட்சம் வழக்குகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காணப்பட்டு இருக்கிறது. வரி விகிதத்தை குறைத்து இருக்கிறோம். தனி நபர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி கிடையாது. உலகிலேயே இந்தியாவில் தான் கம்பெனி வரிகள் குறைவாக உள்ளது.

6 ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்து இருக்கிறது. நிதி உதவி கிடைக்காமல் இருந்த ஏழைகளுக்கு நிதி உதவி கிடைத்து இருக்கிறது. வங்கி கணக்கு இல்லாமல் இருந்தவர்கள் வங்கி கணக்கு தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் கட்டாயம் மற்றும் நிர்பந்தங்களின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் எதிர்பார்த்த பலன்கள் இல்லை. எங்களை பொறுத்தவரை வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை வகுத்து சீர்திருத்தங்களை மேற்கொள்கிறோம். இத்தகைய சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

Similar News