செய்திகள்
சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை

விநாயகர் சதுர்த்தி: சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை- மும்பை மாநகராட்சி

Published On 2020-08-13 03:21 GMT   |   Update On 2020-08-13 03:21 GMT
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை என்று மும்பை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
மும்பை :

மும்பையில் வருகிற 22-ந்தேதி மராட்டிய மக்களின் பாரம்பரிய விழாவான விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்க உள்ளது. கொரோனா பிரச்சினை காரணமாக இந்த விழாவை கொண்டாட கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

எப்போதும் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைக்கும் மராட்டியத்தில், இந்த ஆண்டு 4 அடி உயரத்திற்கு மேல் மண்டல்களில் சிலைகளை வைக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. மண்டல்களில் பக்தர்களுக்கு உடற்வெப்ப பரிசோதனை நடத்தவேண்டும், சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் கணபதி சிலைகளை கடலில் கரைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலை மறுத்து மும்பை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் கூறியிருப்பதாவது:-

10 நாள் கொண்டாட்டத்திற்கு பிறகு விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க தடை இல்லை. தற்காலிகமாக 167 செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து 2 கி.மீ தூரத்திற்குள் இருக்கும் கடற்கரைக்கே சிலைகளை கொண்டு சென்று கரைக்க வேண்டும்.

இதைத்தவிர மற்ற இடங்களில் வசிக்கும் பக்தர்கள் தங்கள் சிலைகளை செயற்கை குளங்கள் மற்றும் வீடுகளில் கரைத்து கொள்ளலாம். கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நெறிமுறைகளை மாநகராட்சி ஏற்கனவே வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க பண்டிகையை எளிமையான முறையில் கொண்டாட வேண்டும். மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News