செய்திகள்
கோப்புப்படம்

படுத்த படுக்கையான நோயாளியை 3-வது மாடிக்கு வரவழைத்த சார்பதிவாளர் இடைநீக்கம்

Published On 2020-08-12 23:59 GMT   |   Update On 2020-08-12 23:59 GMT
படுத்த படுக்கையான நோயாளியை 3-வது மாடிக்கு வரவழைத்து அலைக்கழித்த சார்பதிவாளரை இடைநீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கட்டப்பனையை சேர்ந்தவர் சனீஷ். இவர் கருணாசேரி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் படுத்த படுக்கையாக கிடந்தார். பின்னர் சனீஷ் மருத்துவ செலவுக்காக தனது வீட்டை விற்க முடிவு செய்தார்.

அதன்படி பத்திர பதிவை மாற்றுவதற்காக உறவினர்கள் சிலர் கட்டப்பனை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அவரை ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். பத்திர பதிவு அலுவலகம் 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டது. 3-வது மாடியில் தான் பத்திர பதிவு செயல்பாடு இருந்தது. இதனால் படுத்த படுக்கையான நோயாளியை அங்கு அழைத்துச் செல்வதில் உள்ள சிரமத்தை உறவினர்கள் சார்பதிவாளர் ஜெயலெட்சுமியிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் கட்டாயம் 3-வது மாடிக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. உறவினர்கள் எவ்வளவோ மன்றாடியும் அதிகாரி மறுத்து விட்டார்.

இதை தொடர்ந்து சனீசின் உறவினர்கள் அவரை தூக்கி 3-வது மாடியில் உள்ள சார்பதிவாளரின் இருக்கை அருகே கொண்டு சென்றனர். தொடர்ந்து பத்திர பதிவு நிகழ்வுகள் நடந்து முடிந்தது. இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி சனீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் கட்டப்பனை சார்பதிவாளர் அலுவலகத்தில் படுத்தை படுக்கையான நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் குறித்து சனீசின் நண்பர்களில் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து கேரள பொதுப்பணித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை மந்திரி சுதாகரனுக்கு தெரிய வந்தது.

இதை தொடர்ந்து கட்டப்பனை சார்பதிவாளர் ஜெயலெட்சுமியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பத்திர பதிவுத் துறை இணை செயலாளருக்கு மந்திரி சுதாகரன் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News