செய்திகள்
மந்திரி பசவராஜ் பொம்மை கடல் அலையில் சிக்கி நிலை தடுமாறுவதை படங்களில் காணலாம்.

அரபிக்கடலின் அலையில் சிக்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மந்திரி பசவராஜ் பொம்மை

Published On 2020-08-12 03:15 GMT   |   Update On 2020-08-12 03:15 GMT
அரபிக்கடலின் அலையில் சிக்கிய நிலையில் மந்திரி பசவராஜ் பொம்மை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு :

கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தங்களது மாவட்டங்களுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேபோல் உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில போலீஸ் மந்திரியுமான பசவராஜ் பொம்மை நேற்று உடுப்பிக்கு சென்றார். அவர் உடுப்பி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை குறித்தும், மழை நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் காபு தாலுகாவிற்கு உட்பட்ட படுபித்ரி கடற்கரைக்கு சென்றார். அங்கு அரபிக்கடலில் அலைகள் சீறிப்பாய்ந்து வந்த காட்சியை பார்த்த அவர், அலையுடன் சிறிது நேரம் விளையாட ஆசைப்பட்டார். இதையடுத்து அவர் சீறி வந்த அலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன், மாவட்ட பா.ஜனதா பிரமுகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் திடீரென ஒரு ராட்சத அலை வந்தது. சீறிப்பாய்ந்து வந்த அலை கரையை வேகமாக வந்தடைந்தது. அந்த அலையுடன் பசவராஜ் பொம்மை விளையாடினார். அப்போது அந்த அலை, பசவராஜ் பொம்மையை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அவர் கால் இடறி நிலைதடுமாறினார்.

அப்போது அவரை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணு வர்தனும், பா.ஜனதா பிரமுகரும் இழுத்து பிடித்து காப்பாற்றினர். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் பசவராஜ் பொம்மையின் ஒரு கால் செருப்பை அலை கடலுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. நிலைமை விபரீதமானதால் அந்த செருப்பை எடுக்காமலேயே பசவராஜ் பொம்மை கடற்கரையில் இருந்து திரும்பி வந்துவிட்டார்.

இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வீடியோக்களை பார்த்து பலரும் பசவராஜ் பொம்மையை கிண்டலடித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News