செய்திகள்
கட்டிட வேலை செய்து 616 மதிப்பெண்கள் எடுத்த மாணவனுக்கு மந்திரி சுரேஷ்குமார் நேரில் பாராட்டு

கட்டிட வேலை செய்து 616 மதிப்பெண்கள் எடுத்த மாணவனுக்கு மந்திரி சுரேஷ்குமார் நேரில் பாராட்டு

Published On 2020-08-12 02:58 GMT   |   Update On 2020-08-12 02:58 GMT
கட்டிட வேலை செய்து கொண்டே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 616 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவன் உயர்கல்வி படிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ரூ.5 ஆயிரம் பரிசையும் மந்திரி சுரேஷ்குமார் வழங்கினார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. இந்த தேர்வில் பெங்களூரு ஜீவன்பீமா நகரை சேர்ந்த மாணவனான மகேஷ், 625-க்கு 616 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மாணவனின் தந்தை இறந்து விட்டார். அவரது தாய் தான் கூலி வேலை செய்து மகனை வளர்த்து வருகிறார். மாணவனின் சொந்த ஊர் யாதகிரி மாவட்டம் ஆகும்.

பெங்களூருவில் தங்கி இருந்து அந்த மாணவன் தனது தாயுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கு சென்று வந்ததுடன், அரசு பள்ளியில் படித்தும் வந்துள்ளார். கட்டிட வேலைக்கு சென்றவாறே அந்த மாணவன் படித்ததுடன், 616 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். இதுபற்றி பள்ளி, கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரின் கவனத்திற்கு வந்தது.

உடனே நேற்று காலையில் ஜீவன்பீமாநகரில் உள்ள மாணவன் மகேஷ் வீட்டுக்கு மந்திரி சுரேஷ்குமார் சென்றார். அந்த மாணவன், அவரது தாய்க்கு அருகில் தரையில் அமர்ந்து மந்திரி சுரேஷ்குமார் பேசினார். பின்னர் அவர், கட்டிட வேலை செய்து கொண்டே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 616 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மகேசை வெகுவாக பாராட்டினார். அந்த மாணவனின் உயர்கல்வி படிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், 616 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்ததற்காக ரூ.5 ஆயிரம் பரிசையும் மந்திரி சுரேஷ்குமார் வழங்கினார்.
Tags:    

Similar News