செய்திகள்
விஞ்ஞானி நம்பி நாராயணன்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு - கேரள அரசு வழங்கியது

Published On 2020-08-11 22:02 GMT   |   Update On 2020-08-11 22:02 GMT
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
திருவனந்தபுரம் :

கடந்த 1994-ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக 2 விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த விவகாரம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அவர்மீது தவறு இல்லை என்று கண்டறிந்து சி.பி.ஐ. விடுவித்தது.

தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக நஷ்ட ஈடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சத்தை கேரள மாநில அரசு வழங்கியது.

இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சப்-கோர்ட்டில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, அவருக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள மந்திரிசபை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழு சிபாரிசின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கேரள அரசு வழங்கியது.
Tags:    

Similar News