செய்திகள்
செய்தியாளர்கள் சந்திப்பில் சச்சின் பைலட்

நான் காங்கிரஸ் தொண்டன் - ராஜஸ்தான் திரும்பிய சச்சின் பைலட் பேட்டி

Published On 2020-08-11 18:29 GMT   |   Update On 2020-08-11 18:29 GMT
நான் காங்கிரஸ் தொண்டன் என்றும் கட்சி என்ன கூறுகிறதோ அதை நான் செய்வேன் என்றும் ராஜஸ்தான் திரும்பிய சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் முதல்மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில துணை முதல்மந்திரி பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

இதற்கிடையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அதிருப்தி எம்.எல்.ஏ. சச்சின் பைலட் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குயின்போது ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் உறுதியளித்தார். இதனால் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த ராஜஸ்தான அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்களை டெல்லியில் சந்தித்தபின் சச்சின் பைலட் இன்று ராஜஸ்தான் திரும்பினார். சொந்த மாநிலம் திரும்பிய பைலட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்று அளித்தனர். பல நாட்களுக்கு பின் ராஜஸ்தான் வந்த பைலட் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளால் நான் மிகுந்த வேதனையடைந்தேன். கூறப்பட்டதை நாம் மறந்து விட வேண்டும் என நினைக்கிறேன். அரசியலில் ஒரு சில தன்மைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

அரசியலில் தனிப்பட்ட விரோத உணர்வுகள் இருக்கக்கூடாது. பிரச்சனைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் வேலை செய்ய வேண்டும்.

கட்சிக்கோ அல்லது கட்சி தலைமைக்கு எதிராகவோ நாங்கள் எதையும் பேசவும், செய்யவும் இல்லை. சிலர் தவறான தகவல்களை பரப்பியும், கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர்.

ஆனால், 30 நாட்களுக்க் முன்னர் நாங்கள் எந்த முடிவு எடுத்தோமோ அதே நிலையில் தான் உள்ளோம் என்றார்.

பின்னர் அவரிடம் நீங்கள் மீண்டும் ராஜஸ்தான் மாநில துணைமந்திரியாக வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த சச்சின் பைலட், ‘கட்சி தலைமையிடம் நான் எந்த கோரிக்கையும் விடவில்லை. நான் ஒரு எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் தொண்டன். கட்சி தலைமை என்ன கூறுகிறதோ அதை நான் செய்வேன்’ என தெரிவித்தார்.   
Tags:    

Similar News