செய்திகள்
கோப்பு படம்.

புதிய அறிவிப்பு வரும் வரை பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் சேவை ரத்து நீட்டிப்பு

Published On 2020-08-11 18:18 GMT   |   Update On 2020-08-11 18:18 GMT
புதிய அறிவிப்பு வரும் வரை பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் சேவை ரத்து நீட்டிக்கப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது படிப்படியாக ஆகஸ்டு 12-ந்தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த தடை மேலும் நீட்டிக்கப்படுவதாகவும், அதாவது அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி வரை ரெயில்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் நேற்று சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. மேலும் சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தன. இது நாடு முழுவதும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் சில மணி நேரத்தில் இந்த செய்திகளை ரெயில்வே அமைச்சகம் மறுத்து உள்ளது. இது தொடர்பாக ரெயில்வே அமைச்சகத்தின் டுவிட்டர் தளத்தில், ‘வழக்கமான ரெயில்கள் அனைத்தும் செப்டம்பர் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளன. இந்த செய்தியில் உண்மை இல்லை. ரெயில் போக்குவரத்து தொடர்பாக ரெயில்வே அமைச்சகத்தில் இருந்து புதிய சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதைப்போல சிறப்பு மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் சேவை ரத்து நீட்டிக்கப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கும் என உத்தரவில் தெரிவித்துள்ளது. அதே சமயம் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மும்பையில் மட்டும் தேவைக்கு ஏற்ப உள்ளூர் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News