செய்திகள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை

Published On 2020-08-11 05:54 GMT   |   Update On 2020-08-11 05:56 GMT
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கை தொழிற்சாலைகள் உருவாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகள் பெருகவும் வழிவகுக்கும் என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் இது பெரும் நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. நாட்டில் உள்ள வளங்களை தனக்கு நெருக்கமான நண்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு உதவி செய்கிறது என்பதற்கு அதிர்ச்சி தரும் மற்றொரு உதாரணமாக இந்த அறிக்கை அமைந்து உள்ளது.

இந்த அறிக்கையில் உள்ள அம்சங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் அதிக மாசு ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்கம் போன்றவற்றுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை இருக்காது. நெடுஞ்சாலைகள், ரெயில் பாதைகள் அமைப்பதற்காக அடந்த காடுகள் அழிக்கப்படும். அங்கு வாழும் அரியவகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் அழியும். அங்குள்ள குடியிருப்புகளும் அழிக்கப்படும்.

எனவே நாட்டின் வளங்களை பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டும் அனைவரும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்த அறிக்கைக்கு எதிராக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும்.

தேசத்தின் வளங்கள் கொள்ளை போவதையும், சுற்றுச்சூழல் நாசமாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும் வகையில் இந்த வரைவு அறிக்கையை மத்திய வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News