செய்திகள்
கரிப்பூர் விமானநிலையம்

ஏர் இந்தியா விமான விபத்திற்கு 2 மணி நேரத்திற்குமுன் அதே பிரச்சினையை சந்தித்த மற்றொரு விமானம்

Published On 2020-08-11 03:00 GMT   |   Update On 2020-08-11 03:00 GMT
கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் முதல்முறை தரையிறங்க முயற்சி செய்தபின் 2-வது முறையாக இண்டிகோ விமானம் தரையிறங்கியது தெரியவந்துள்ளது.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.41 மணியளவில் கரிப்பூர் விமான நிலையத்தின் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கும்போது சறுக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. விமானத்தில் மொத்தம் 190 பேர் இருந்தனர். அவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றன.

கனமழை காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமான நிலையத்திற்கு மேலே வட்டமடித்ததாகவும், இரண்டு முறை தரையிறக்க முயன்று தோல்வியடைந்து 3-வது முறையாக தரையிறக்கும்போது விபத்திற்குள்ளானதாகவும் விமான போக்குவரத்தை கண்காணிக்கும் ‘Flightradar24’ என லைவ் வெப்சைட் தகவல் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில் அதே இணைய தளத்தின் தகவல்படி, ஏர் இந்தியா விமான விபத்து நடந்ததற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இண்டிகோ விமானம் பெங்களூருவில் இருந்து கரிப்பூர் வந்துள்ளது. கனமழை காரணமாக விமானியால் முதல் முறை தரையிறக்க முடியவில்லை. 2-வது முறையாகத்தான் தரையிறக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது விமான பாதுகாப்பு நிபுணர் கேப்டன் அமித சிங் தெரிவித்துள்ளார்.

25 வருடத்திற்கு மேல் விமானத்துறையில் அனுபவம் உள்ள அமித் சிங், ‘‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரையிறங்கிய அதே 10-வது ஓடுதளத்தில் இண்டிகோ விமானம் தரை இறங்கியுள்ளது. முதல்முறை தரையிறங்கும் முயற்சி இண்டிகோவுக்கும் தோல்வியில் முடிந்துள்ளது. கனமழை பெய்ததால் விமானத்தை தரையிறக்கக் கூடிய அளவிற்கு தெளிவான பார்வை கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது மேகங்கள் தரையிறங்கக் கூடிய ஓடுதளத்தை மறைத்திருக்கிலாம்.

கடுமையான வானிலை இண்டிகோவை குறைந்த அளவில் பாதித்திருக்கலாம். மேலும், ATR, TurboProp Aircraft என்ஜின் என்பதால் போயிங் ஜெட்-என்ஜினைவிட வேகம் குறைவு என்பதால் அதுவும் காரணமாக இருந்திருக்கலாம்’’என்றார்.
Tags:    

Similar News