செய்திகள்
கோப்பு படம்.

சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 19-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2020-08-10 20:03 GMT   |   Update On 2020-08-10 20:03 GMT
சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்தை 8 வாரங்களுக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பிலும், மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு பல மாதங்களாக விசாரிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி மத்திய அரசு தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான காணொலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை துவங்கியதும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தங்கள் தரப்பில் மிகவும் விரிவான வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதிகள், அவசரமாக விசாரிக்க பல வழக்குகள் இருப்பதாகவும் நேரம் குறைவாக இருப்பதாகவும் கூறி விரிவான விசாரணையை மேற்கொள்ளும் வகையில் வழக்கை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News