செய்திகள்
சசிதரூர் எம்.பி.

காங்கிரசுக்கு முழு நேர தலைவர் வேண்டும் - சசி தரூர் எம்.பி. பரபரப்பு பேட்டி

Published On 2020-08-10 07:27 GMT   |   Update On 2020-08-10 07:27 GMT
காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. கட்சித்தலைவராக இருந்த ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் தோல்வியைத் தழுவினார்.

அதையடுத்து தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, ராகுல் காந்தி கட்சித்தலைவர் பதவியைதுறந்தார்.

மேலிடத்தலைவர்கள் பலரும் வலியுறுத்தியும், ராஜினாமா முடிவை திரும்பப்பெற மறுத்தார். அதையடுத்து சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்டு 10-ந் தேதி இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்றார்.

அவர் பதவியேற்று ஓராண்டு காலம் ஆகியுள்ள நிலையில் கட்சிக்கு முழு நேர தலைவர் வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் எம்.பி. கூறி உள்ளார்.

இதையொட்டி அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சித்தலைமை பற்றி நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் நிச்சயமான நம்புகிறேன்.

கடந்த ஆண்டு இடைக்கால தலைவராக சோனியா காந்தியின் நியமனத்தை நான் வரவேற்றேன். அதே நேரம், இந்த சுமையை அவர் காலவரையறையின்றி சுமக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

காங்கிரஸ் கட்சியானது நம்பகமாக தேசிய எதிர்க்கட்சிக்கு உரிய சவாலை ஏற்க இயலாத நிலையில் தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கிறது என வளர்ந்து வரும் கருத்தை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை உள்ளது.

ஒரு முழு நேர தலைவரை கண்டுபிடிக்கும் செயல்முறையை காங்கிரஸ் கட்சி விரைவுபடுத்த வேண்டிய தருணம் இதுதான்.

ஒரு பங்கேற்பு மற்றும் ஜனநாயக செயல்முறையின் மூலம் வெற்றி பெறும் வேட்பாளருக்கு முறையான சட்டப்பூர்வ உத்தரவும், நம்பகத்தன்மையும் கிடைக்கும். இது, கட்சியின் நிறுவன மற்றும் கட்டமைப்பு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் முக்கியமானதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

“ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்று காங்கிரசில் வளர்ந்து வரும் குரல்கள் குறித்தும், அவர் மீண்டும் தலைமைப்பதவிக்கு திரும்புவதற்கான சிறந்த சூழல் இதுவாக இருந்தால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் உங்கள் கருத்து என்ன?” என்று சசிதரூரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “நிச்சயமாக, ராகுல் காந்தி மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்க தயாராக இருந்தால், அவர் செய்ய வேண்டியது ராஜினாமாவை திரும்பப்பெறுவது மட்டுமே. அவர் 2022-ம் ஆண்டு டிசம்பர் வரை தலைவர் பதவி வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவர் தலைமை பொறுப்பை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் காரியக்கமிட்டிக்கும், தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்துவது கட்சிக்கு எத்தனையோ பலன்களை தரும் என்று நான் இப்போது சில காலமாகவே வாதிட்டு வருகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து. இது உங்களுக்கும் தெரியும்” என பதில் அளித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என்ற சசிதரூர் எம்.பி.யின் கருத்து, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News