செய்திகள்
இந்து குடும்பத்தினர் வசித்த வீடு

ராஜஸ்தானில் சோகம்: பாகிஸ்தான் இந்து குடும்பத்தில் 11 பேர் மர்ம சாவு - தற்கொலையா என விசாரணை?

Published On 2020-08-10 00:24 GMT   |   Update On 2020-08-10 00:24 GMT
பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்து ராஜஸ்தானில் வசித்து வந்த இந்து குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜெய்ப்பூர்:

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு இந்து குடும்பத்தினர் நீண்டகால விசாவில், கடந்த 2015-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு வந்தனர். கடந்த 6 மாதங்களாக ஜோத்பூர் மாவட்டம் லோட்தா கிராமத்தில் ஒரு பண்ணையை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். அங்கேயே ஒரு குடிசையில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், நேற்று அந்த குடிசையில் அக்குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அதே குடும்பத்தை சேர்ந்த கேவல் ராம் (35) என்பவர் மட்டும் உயிருடன் இருந்தார்.

தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். 11 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜோத்பூருக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர்கள், புதாராம் (75), அவருடைய மனைவி அந்தரா தேவி, மகன் ரவி (31), மகள்கள் ஜியா (25), சுமன் (22), பேரன்கள் முக்டாஷ் (17), நைன் (12), லட்சுமி (40) மற்றும் கேவல் ராமின் 3 மகன்கள் ஆவர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல் பராத் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

11 பேரின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. ரசாயன வாசனை வீசுவதால், அவர்கள் ஏதோ ரசாயனத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகிறோம். மற்றபடி உடல்களில் காயம் ஏதும் இல்லை.

பூர்வாங்க விசாரணையில், குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. உயிருடன் உள்ள கேவல் ராமின் மனைவி, குடும்ப பிரச்சினையில், தனியாக தன் பெற்றோருடன் ஜோத்பூரில் வசித்து வருவதாகவும், அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து இவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.

கேவல் ராமிடம் நடத்திய விசாரணையில், சனிக்கிழமை இரவு உணவை முடித்த பிறகு, வயலில் விலங்குகள் வந்தால் விரட்டுவதற்காக தான் அங்கு சென்று தூங்கியதாகவும், காலையில் வந்தபோது, 11 பேரும் இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த மரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News