செய்திகள்
ரத்த தானம் செய்ய குவிந்தவர்கள்

கேரள விமான விபத்து: காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் செய்ய குவிந்த கேரள மக்கள்- நெகிழ்ச்சி சம்பவம்

Published On 2020-08-09 14:41 GMT   |   Update On 2020-08-09 14:41 GMT
கோழிக்கோடு விமான விபத்தின் போது காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் செய்ய கேரள மக்கள் குவிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு:

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளானது அறிந்தவுடனேயே உள்ளூர் மக்கள் பலர் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதற்கிடையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ரத்தம் தேவைப்படுவதாகவும், ரத்த தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் உடனடியாக முன்வரலாம் என வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதையறிந்த நூற்றுக்கணக்கானவர்கள் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். கொட்டும் மழை மற்றும் கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் மருத்துவமனைக்கு வந்து பலர் ரத்த தானம் செய்தது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
Tags:    

Similar News