செய்திகள்
மத்திய மந்திரி கைலாஷ் சவுத்ரி

மத்திய மந்திரி கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2020-08-09 10:22 GMT   |   Update On 2020-08-09 10:22 GMT
மத்திய மந்திரி கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெய்ப்பூர்:

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக பிரபல நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தினர், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என நாட்டின் முக்கியமான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பட்டியலில் தற்போது மேலும் ஒரு மத்திய மந்திரி இணைந்துள்ளார். அதன்படி, ராஜஸ்தானின் ஜெய்சால்மர் தொகுதி எம்.பி.யும், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணை மந்திரியுமான கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து ஜோத்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கைலாஷ் சவுத்ரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘கொரோனா அறிகுறி இருந்ததால், நேற்று (நேற்று முன்தினம்) இரவு எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனக்கு காய்ச்சலும், லேசான சுவாசக்கோளாறும் உள்ளது. எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினரை விட்டு தனிமையில் இருக்குமாறு வலியுறுத்தி உள்ள கைலாஷ் சவுத்ரி, அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தனது ஜெய்சால்மர் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கைலாஷ் சவுத்ரி, அப்போது பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

உள்துறை மந்திரி அமித்ஷாவை தொடர்ந்து மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மத்திய அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News