செய்திகள்
ரெஹானா பாத்திமா

போக்சோ வழக்கு : கொச்சி போலீஸ் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண்

Published On 2020-08-09 08:51 GMT   |   Update On 2020-08-09 08:51 GMT
அரை நிர்வாண உடல் மீது தன்னுடைய பிள்ளைகள் ஓவியம் வரைவது போல வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்ட ரெஹானா பாத்திமா கொச்சி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
கொச்சி:

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணி புரிந்தார். இவர் 2018-ம் ஆண்டு சபரிமலை செல்ல முயன்று சர்ச்சையில் சிக்கினார். பேஸ்புக்கில் சபரிமலை அய்யப்பன் குறித்து ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டதால், போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, மத இழிவில் ஈடுபட்டதாக ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் குடியிருப்பில் வசித்து வந்த ரெஹானா தன் அரை நிர்வாண உடல் மீது தன்னுடைய மகள் மற்றும் மகனை ஓவியம் வரைவது போல வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார்.

கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது . இதனால், முன்ஜாமீன் கோரி கடந்த மாதம் 24-ந் தேதி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், கேரள ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்து விட்டது. அதனைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ரெஹானா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதால் ரெஹானா பாத்திமா போலீசில் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி நேற்று மதியம் அவர் கொச்சியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதற்கான நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News