செய்திகள்
ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா?- பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்

Published On 2020-08-08 21:21 GMT   |   Update On 2020-08-08 21:21 GMT
கோழிக்கோடு விமான நிலையம் மழைக்காலங்களில் விமானங்கள் தரை இறங்குவதற்கு பாதுகாப்பில்லாதது என்று பாதுகாப்பு கமிட்டியின் உறுப்பினர் கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறியுள்ளார்.
கோழிக்கோடு:

கேரளாவில் நேற்று முன்தினம் விமான விபத்து நடந்த கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் மழைக்காலங்களில் விமானங்கள் தரையிறங்க பாதுகாப்பற்றது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு கமிட்டி கூறியுள்ளது.

இது குறித்து கமிட்டியின் உறுப்பினர் கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், ‘கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் நடந்த விமான விபத்துக்கு பிறகு அதைப்போன்ற ஓடுதள அமைப்பு கொண்ட கோழிக்கோடு விமான நிலையமும், மழைக்காலங்களில் விமானங்கள் தரை இறங்குவதற்கு பாதுகாப்பில்லாதது என்று ஏற்கனவே எச்சரித்திருந்தேன். விமானங்கள் ஓடி வந்து தரை இறங்குவதற்கான அதிகபட்ச ஓடுதளத்தை(ரன்வே) விட பாதுகாப்புக்காக கூடுதலாக 240 மீட்டர் நீளத்துக்கு ஓடுதளம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் கோழிக்கோடு விமான நிலையத்தில் 240 மீட்டர் நீளத்துக்கு பதில் 90 மீட்டர் நீளத்துக்குத் தான் ஓடுதளம் உள்ளது’ என்று கூறினார்.

இதுபோன்ற டேபிள் டாப் விமான நிலையங்களில் ஓடுதளத்திற்குள் விமானத்தை நிறுத்த முடியாவிட்டால், அதை மீறி விமானம் ஓடுவதற்கு இடம் இல்லை என்பது ஆபத்தான விஷயம் என்று கூறிய மோகன் ரங்கநாதன், இது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டே சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் ஆலோசனை கழக தலைவருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News