செய்திகள்
கோழிக்கோடு விமான விபத்து

ஆபத்தான நிலையில் சிலர், வென்டிலேட்டரில் 3 பேர்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

Published On 2020-08-08 10:45 GMT   |   Update On 2020-08-08 10:45 GMT
மருத்துவமனையில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்று பேருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. காயம் அடைந்த பயணிகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டு விமானிகள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக நேற்று நள்ளிரவு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

தகவல் அறிந்த இடத்தை பார்வையிட மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று கோழிக்கோடு வந்தார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில்  ‘‘விமானத்தில் மொத்தம் 190 பேர் இருந்தனர். அவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 149 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளர்.



சில பயணிகள் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் மூன்று பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுகிறார்கள். நாங்கள் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தோம். இரண்டு கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள டேட்டாவை ஆராய்ந்த பின்னர், விபத்துக்கான காரணத்தை அறிவோம்’’ என்றார்.
Tags:    

Similar News