செய்திகள்
ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன?- வெளிவரும் முக்கிய தகவல்

Published On 2020-08-08 10:07 GMT   |   Update On 2020-08-08 10:07 GMT
ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன? என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளிவந்து உள்ளன.
மலப்புரம்:

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.

விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கனமழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக  விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான விமானம் முற்றிலும் சிதைந்த நிலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதை பார்க்கும் போது விமான ஓடுதளத்தின் சற்று மேல் இருந்து தான் கீழே விழுந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமான ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்தில் சிக்கியிருந்தால், இந்தளவிற்கு விமானம் இரண்டாக உடைந்திருக்காது என்று கூறப்படுகிறது.

கனமழை காரணமாக ஓடுதளத்தில் தேங்கி இருந்த மழைநீரும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டாப் ரன்வே எனப்படும் ஓடுதள அமைப்பை கொண்டது. விமான ஓடுதளம் உயரமான மலைக்குன்றின் மீது அமைந்திருப்பதை டேபிள் டாப் ரன்வே இவ்வாறு அழைப்பார்கள்.

கேரளாவில் உள்ள ஒரே டேபிள்டாப் ரன்வே கோழிக்கோடு விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலைய டேபிள் டாப் ரன்வே நீளம் 2 ஆயிரத்து 850 மீட்டர்கள் ஆகும். ஆனால் பொதுவாக 3 ஆயிரத்து 150 மீட்டர் தூரத்திற்கு குறைவான ரன்வேவாக இருந்தால் அதில் விமானத்தை தரையிறக்குவது சற்று கடினமான ஒன்றாகும். கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என 9 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

மேலும் விமான விபத்திற்கு முன் மூன்று முறை தரையிறங்க முயற்சித்துள்ளது. கோழிக்கூட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் முதலில் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்க முயன்றுள்ளது. ஆனால், அதில் தரையிறங்காமல் இரண்டாவது முறையாக ஓடுதளத்தின் 28-ல் தரையிறங்க முயற்சித்துள்ளது. அதன் பின்னர் மூன்றாவது முறை மீண்டும் ஓடுதளத்தின் 10-ல் தரையிறங்கும் போது தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனியின் ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு நிபுணர் குழு தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

விபத்து தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - 1800 2222 71, விமான  நிலைய கட்டுப்பாட்டு அறை - 0483 2719493, மலப்புரம் கலெக்டர் அலுவலகம் - 0483 2736320, Kozhikode Collectorate - 0495 2376901.
Tags:    

Similar News