செய்திகள்
கேரள சுகாதார மந்திரி கேகே சைலஜா

கேரள விமான விபத்து மீட்பு பணி அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-08-08 06:44 GMT   |   Update On 2020-08-08 06:44 GMT
கேரள விமான விபத்து மீட்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் சுய தனிமைப்படுத்துதல் முகாமுக்கு செல்ல வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:

‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

விமான விபத்து நடந்த பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய உயரதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். இதேபோன்று பேரிடர் மீட்பு படையினரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று, காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் சென்றிருந்தனர்.

இந்நிலையில், கேரள சுகாதார மந்திரி கே.கே. சைலஜா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கோழிக்கோடு விமான நிலையத்தில் மீட்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் சுய தனிமைப்படுத்துதல் முகாமுக்கு செல்ல வேண்டும். அவர்கள் அனைவருக்கும் மாநில அரசு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.

இதேபோன்று, விபத்து நடந்தது பற்றி விசாரணை மேற்கொள்ள விமான விபத்து புலனாய்வு துறை, மத்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் மற்றும் விமான பாதுகாப்பு துறை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளும் கேரளாவுக்கு செல்கின்றனர்.

பீகாரை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரி, நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணைக்காக மும்பை சென்றபொழுது, மாநகராட்சி அதிகாரிகளால் சுய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அவர் நேற்றிரவு பாட்னா திரும்பினார்.

Tags:    

Similar News